Blogger Widgets

logo

Saturday, September 1, 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - (தொடர் 2)


திருட்டுத் தொழிலில் ஈடுபடுபவனுக்கு திருட்டு ஒரு தவறான தொழில் என்பது நன்றாகத் தெரியும். மதுபானம் விற்பது, விபச்சாரத் தொழில் நடத்துவது, லஞ்சம் வாங்குவது இன்ன பிற மோசடிகளில் ஈடுபடுவது ஆகியவை தவறானவை தான் என்பதும் அதில் ஈடுபடுவோருக்கு நான்றாகத் தெரியும். தவறு எனத் தெரிந்து கொண்டு தான் அவற்றைச் செய்து வருகின்றனர். இத்தகையோரிடம் இவற்றைச் செய்ய வேண்டாம் எனக் கூறினால் அவர்களிடமிருந்து இரண்டு கேள்விகள் பிறக்கின்றன. 


இத்தகைய தொழில்களைச் செய்வதால் எனக்கு என்ன கேடு ஏற்பட்டு விடும்இவற்றை விட்டு விலகிக் கொண்டால் எனக்கு ஏற்படும் நன்மை என்னஇவை தாம் அந்தக் கேள்விகள்.

  உன்னை ஆட்சியாளர்கள் தண்டிப்பார்கள், சிறையில் வாட வேண்டி வரும். அதனால் திருட்டிலிருந்து விலகிக் கொள்! என்று தான் அவர்களிடம் கூற முடியும். அவர்களிடத்தில் இதற்கு மறுப்பு தயாராக இருக்கின்றது. நான் திருடுவதைப் பெரும்பாலும் கண்டுபிடிக்க முடியாது. நூறு முறை நான் திருடினால் ஒரு முறை பிடிபடுவதே சந்தேகம். நூறு திருடர்களில் ஒருவர் தாம் பிடுபடுவர். பலமுறை திருடி நான் சேர்த்த செல்வத்திற்காக சிறிய தண்டனை பெற நான் தயார். அல்லது நான் பிடிக்கப்பட்டால் சிறந்த வக்கீலை நியமித்து குற்றமற்றவன் என்று நிரூபித்து விடுவேன். அல்லது நீதிபதியையே விலைக்கு வாங்கி விடுவேன். இவற்றையெல்லாம் மீறிச் சிறையில் நான் தள்ளப்பட்டாலும் நான் செத்துவிடப் போவதில்லை. வெளியில் இருந்த போது நான் அனுபவித்ததை எல்லாம் உள்ளேயும் அனுபவிக்கும் வழி எனக்குத் தெரியும் என்று பதிலளிப்பார்கள்.

   திருட்டுத் தொழில் உள்ளிட்ட,  எந்தக்குற்றங்களில் ஈடுபட்டாலும் எனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் வலிமை எனக்கு உண்டு என்று ஒருவன் நம்புவதே குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. என்ன கேடு ஏற்படும் என்ற கேள்விக்காவது ஏதோ பதில் சொல்லலாம்.  இவற்றை விட்டு நான் விலகிக் கொண்டால் எனக்குக்கிடைக்கும் நன்மை என்ன என்ற கேள்விக்கு எந்த விடையும் யாராலும் கூற முடியாது. இஸ்லாம் மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் பொருத்தமான விடையை அளிக்கின்றது.

  சர்வ சக்தி மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்; அவனை யாராலும் ஏமாற்றவோ,விலை பேசவோ முடியாது. உலகம் அழிக்கப்பட்ட பின் அனைவரும் அந்த வல்லவனால் உயிர்ப்பிக்கப்பட்டு அவன் முன்னே நிறுத்தப்படுவார்கள். தீயவர்களுக்குக் கடுமையான தண்டனையையும், நல்லவர்களுக்கு மகத்தான பரிசுகளையும் அவன் வழங்குவான் என்று இஸ்லாம் கூறுகிறது.

   இதில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் ஒருக்காலும் தீய செயல்களில் ஈடுபட மாட்டான். அவனையுமறியாமல் தீய செயல்களில் ஈடுபட்டாலும் உடனடியாகத் தன்னைத் திருத்திக் கொள்வான்.


  உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.


(அல்குர்ஆன் 2:177)


  இந்த வசனம் இஸ்லாத்தைப் பற்றித் தவறான நம்பிக்கை கொண்டவர்களுக்கும், இஸ்லாத்தின் மேல் ஆட்சேபனை எழுப்பக் கூடியவர்களுக்கும் தெளிவான பதிலைக் கூறுவதுடன் இஸ்லாத்தில் இல்லாத சடங்குகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வரும் முஸ்லிம் பெயர் தாங்கிகளுக்கும் சரியான மறுப்பாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்த போது கஃபா ஆலயத்தை நோக்கித் தொழுகை நடத்தி வந்தனர். பின்னர் மதீனா நகருக்கு வந்ததும் ஜெரூசலமில் உள்ள பைத்துல் முகத்தஸ் எனும் ஆலயத்தை நோக்கித் தொழுகை நடத்தலானார்கள். கஃபாவை நோக்கியே தொழுகை நடத்துமாறு இறைவன் கட்டளையிட்டதும் மீண்டும் கஃபாவை நோக்கித் தொழலானார்கள்.

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் திசையை அடிக்கடி மாற்றி வந்தது. யூதர்களாலும்,மற்றவர்களாலும் குறை கூறப்பட்டு வந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுகை நடத்தியகால கட்டத்தில் "முஹம்மது தமது முன்னோர்களின் தொழும் திசையை மாற்றி விட்டார்'' என்று மக்கா நகர் வாசிகள் குறை கூறினார்கள்.

" நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவை நோக்கி தொழுகை நடத்தத்துவங்கி யதும் பலநபிமார்கள் தொழும் திசையாகக் கருதி வந்த பைத்துல் முகத்தஸை முஹம்மத் மதிக்கவில்லை'' என்று யூதர்கள் விமர்சனம் செய்தனர். திசைகளில் தான் நன்மை இருக்கிறது என்ற மூட நம்பிக்கையைத் தகர்த்து, எது நன்மை என்பதை இவ்வசனம் விளக்குகின்றது. இதைக் கவனத்தில் கொண்டு மேற்கண்ட வசனத்தைப் பாருங்கள்!

  நன்மை என்பது கிழக்கையோ மேற்கையோ நோக்குவதில் அல்லது இதுபோன்ற புறச் சடங்குகளில் கிடையாது. மாறாக நன்மை என்பது அல்லாஹ்வையும் நியாயத் தீர்ப்பு நாளையும் நம்புவது தான் என்றும்அல்லாஹ்வையும் நியாயத்தீர்ப்பு நாளையும் ஒருவன் நம்பி அதற்கு அஞ்சி இவ்வுலகில் ஒழுங்காக வாழ வேண்டும். இதுதான் நன்மை. என்றும் இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான். 

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கேட்கும் இரண்டு கேள்விகளுக்கும் இதில் விடையிருக்கிறது. அல்லாஹ்வையும் அவன் நியாயமான தீர்ப்பு வழங்கக் கூடிய நாளையும் நம்பி குற்றம் புரிந்தோருக்கு அந்நாளில் தப்ப இயலாத தண்டனை உண்டு. நன்மை செய்தோருக்கு மகத்தான பரிசு உண்டு என்பதையும் நம்பக் கூடியவன் இந்த கேள்விகளைக் கேட்க மாட்டான்.


நன்றி : www.onlinepj.com

No comments:

Post a Comment